பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்! பெற்றோரிடம் சிக்கிய பரபரப்பு கடிதம்
வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வரும் மாணவனை அப்பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த மாணவன் மீண்டும் மீண்டும் குறித்த ஆசிரியரிடம் ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டத்தற்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.
எனினும், மாணவன் பெற்றோருக்கு இது தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.
இதனால் அதிக மன அழுத்ததிற்கு உள்ளான மாணவன் நேற்று (20-09-2023) ஒரு கடிதத்தை தனது வீட்டில் எழுதி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தை கண்ட பெற்றோர் மாணவனை விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார்.
இதனையடுத்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் மாணவன் மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
மேலும், மாணவனின் கடிதத்தினை கொண்டு வவுனியா தலமை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் மாணவனின் தந்தையால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
மாணவனால் எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
அன்புள்ள அப்பா, அம்மா நான் சுயநினைவுடன் எழுதும் கடிதம். எனக்கு பாடசாலை செல்ல விருப்பமில்லாத நிலை ஏற்படுகிறது. காரணம் 11.09.2023 தொடக்கம் எனது கற்றல் நடவடிக்கை தொடர்பாக என்னை வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை.
அதற்கு காரணம் கேட்ட போது, பகுதித் தலைவர் என்னை கீழே விழுத்தி தும்புத் தடியால் அடித்து, சப்பாத்து காலால் மிதித்து என்னை மாணவன் என்றும் பார்க்காது சித்திரவதை செய்கிறார்.
அதற்கு பிறகு இடைவேளை நேரம் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது என்னை வெளியே செல்ல விடவில்லை. சிறுநீர் கழிக்க செல்ல கேட்டத்தற்கு தும்புத் தடியால் அடித்து, சப்பாத்து கால்களால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் உதைந்தார்.
20.09.2023 அன்று என்னை தும்புத்தடியால் அடித்து என் கை விறைத்து நிற்கும் போது என்னை பாவம் என்றும் பார்க்காமல் பூங்கன்றுக்கு தண்ணீர் ஊற்ற விட்டார். எனக்கு உடல் எங்கும் வலியாக உள்ளது. மூச்சு விட கஸ்ரமாகவுள்ளது. பாடசாலைக்கு வருவதற்கு சைக்கிள் ஓட நெஞ்சு வலிக்கிறது. இதனால் எனக்கு பாடசாலை வரவே விருப்பமில்லாது இருக்கிறது.
எனவே எனது உடம்பிற்கு ஏதும் பிரச்சினை ஏற்படுமாயின் அதற்கு முழுக் காரணம் எனது பகுதித் தலைவராகிய ந.பிரதாஸ் ஆசிரியர் ஆவார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேவளை, குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
குறித்த பாடசாலையில் ஒருசில மாதங்களுக்கு முன் பிறிதொரு ஆசிரயரால் வேறு ஒரு மாணவனின் செவியில் தாக்கி அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதுடன் பாடசாலையின் நற்பெயர் குறித்து பெற்றோர் குறித்த விடயத்தை பெரிது படுத்தாமல் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.