வவுனியாவில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை!
வவுனியாவில் உள்ள பகுதி ஒன்றில் பட்டப்பகலில் வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் வவுனியா – ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பகுதியில் உள்ளவர்கள் தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற நிலையில், அதனை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றினை திருடிச்சென்றுள்ளனர்.
மாலை நேரம் வீட்டு உரிமையாளர் வீடு திரும்பிய சமயத்தில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததுடன், 1000 ரூபா பணமும் வீட்டு வாயிலில் காணப்பட்டது.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்து பணமும், பெறுமதியான நகைகளும் திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வீட்டார் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.