வவுணதீவு படுகொலை சம்பவம்; முன்னாள் போராளியை மாட்டிவிட்ட பொலிஸ் பரிசோதகர்
மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகாமையில் இரு பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்துள்ளதாக பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது மட்டு. புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருமான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் திங்கட்கிழமை (21) சி.ஐ.டி யினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி
கடந்த 2018 நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்த பொலிஸ் சாஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபர் ஆகியோரை இனந் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கத்தி வெட்டியும் கொலை செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த நபர் கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள குற்ற புலனாய்வு திணைக்களத்தின் நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டார்.
இந் நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹரானின் சாரதி உட்பட நால்வரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்.
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் வவுணதீவு படுகொலையில் உண்மை சம்பத்தை மூடிமறைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.