உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் அற்புதம்!
ஈழத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், கடந்த திங்கட்கிழமை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது.
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரினைக் கடலிலே பெற்றுக்கொள்கின்ற அரிய நிகழ்வு நேற்று (25) மாலை சிறப்பாக இடம்பெற்றது.

முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம்
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளைத் தொடர்ந்து, தீர்த்தக்குடம் பாரம்பரிய முறைப்படி பறை வாத்தியம் முழங்க, அடியவர்கள் புடைசூழ வீதிகள் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது.
வீதியெங்கும் அடியவர்கள் கும்பங்கள் வைத்து, மடைகள் பரவி, சிதறு தேங்காய்கள் உடைத்துத் தீர்த்தக்குடத்தை வரவேற்றனர். கடலில் எடுக்கப்பட்ட தீர்த்தக்குடம், இரவு 11.45 மணியளவில் மீண்டும் காட்டு விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் மடைபரவி, உப்புநீரிலே அற்புதமாக விளக்கேற்றி ஏடு படிக்கும் நிகழ்வு முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்சவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மே 31 ஆம் திகதி காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மறுநாள் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலையில் மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா பொங்கல் உற்சவம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்க்கல் விழாவில் கலந்துகொள்ள பெருமளவு பக்தர்கள் ஆலயத்திற்கு ஒவ்வொரு வருடமும் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.