வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத் திருவிழாவில் இடம்பெற்ற இரு துயர சம்பங்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று (18) மாலை வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது. இதன்போதே இந்த சம்பவங்களும் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
ஒருவர் உயிரிழப்பு மற்றுமொருவர் மாயம்
சம்பவத்தில் , வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச் சேர்ந்த 54 வயதுடைய கந்தசாமி வினோகரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில், சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த 30 வயதுடைய தயாரூபன் வைஷ்ணவன் என்ற இளைஞர் காணாமல்போயுள்ளார். காணாமல் போனவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் என கூறப்படுகின்றது.
வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சுவாமி தீர்த்தமாடிய பின்னர், பக்தர்கள் கடலில் இறங்கி நீராடியபோதே இந்த துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் கடலில் மூழ்கியபோது அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் அவரை டிரக்டரில் கொண்டு சென்று, பின்னர் அம்புலன்ஸ் மூலமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். எனினும் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இரவு சுமார் 8.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி மீனவர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி முன்னெடுக்கபப்ட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆலயதிருவிழாவில் இடம்பெற்ற இச்சம்பவம் அங்கிருந்தோரை தியரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.