காலிமுகத்திடல் போராட்டக்களம் போதைப்பொருள் அடிமைகளின் கூடாரம்!
காலி முகத்திடல் போராட்டக்களமானது தற்போது போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது உரையாற்றுகையில் அவர் இதனைத் கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘கோட்டா கோ ஹோம்’ அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகிச்செல்லுமாறு கோரியே காலி முகத்திடலில் ஆரம்பத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர் பதவி விலகி அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியும் தெரிவுசெய்யப்பட்டார்.
எனினும், தமது நோக்கம் நிறைவேறிய பின்னரும் போராட்டம் தொடர்கிறது. இது நியாயமற்றது. நாட்டை சீர்குலைத்து, ஆட்சி கவிழ்ப்புக்கு வழிவகுக்கும் இடமாக அது இருக்கக்கூடாது.
அமைதி போராட்டக்காரர்களுக்கு பின்னால் ஒழிந்துகொண்டு இந்த போராட்டத்தை பாதாள உலக குழுவினரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுமே முன்னெடுக்கின்ற நிலையில் இதற்கு சில அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.