நேட்டோவின் செயலிழப்பு மீது அமெரிக்கா அதிருப்தி ; ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவு
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை வெள்ளை மாளிகையில் சந்தித்த பிறகு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அந்த அமைப்பை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
அனைத்து எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களில் (Caps) பதிவிட்டுள்ள ட்ரம்ப், "நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ அங்கு இருக்கவில்லை, மீண்டும் தேவைப்பட்டாலும் அவர்கள் இருக்கப் போவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் நேட்டோ நாடுகளுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த தனது அதிருப்தியை அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது பதிவில், "கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள், அந்தப் பெரிய, மோசமாக நிர்வகிக்கப்படும் பனிக்கட்டி!!!" என்று குறிப்பிட்டுள்ளார்.

டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்பின் முந்தைய திட்டத்திற்கு நேட்டோ நட்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு சிஎன்என் (CNN) ஊடகத்திற்குப் பேட்டியளித்த மார்க் ரூட்டே, ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் இப்போது "நிச்சயமாக" பாதுகாப்பாக இருப்பதாகத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.