சவூதி அரேபியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா
மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை பகிரப்படவில்லை என்பதுடன், இது இன்னமும் அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இது பல தசாப்த காலம் நீடிக்கக்கூடிய, பில்லியன் கணக்கிலான டொலர்கள் மதிப்பிலான கூட்டுப் பங்கான்மையாகும். இதில் சவூதியின் அணுசக்தித் திட்டத்துடன் அமெரிக்க நிறுவனங்களும் நிபுணர்களும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவினால் கட்டப்படும் செறிவூட்டல் நிலையத்தில் சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டி எரிபொருளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியா தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடும் என சிலர் கவலை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.