அமெரிக்க தேர்தல் முடிவுகள்; எலான் மஸ்க்கிற்கு பெரும் ஏமாற்றம்!
அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்ட எலான் மஸ்க்கிற்கு, அவர் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

450 மில்லியன் டொலர்களைச் செலவிட்ட எலான் மஸ்க்
குறிப்பாக, அரசாங்க ஒப்பந்தங்கள், தேசிய பாதுகாப்புத் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்த கண்காணிப்பு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில், ஒரு தேர்தல் சுழற்சிக்காகத் தனிநபர் ஒருவர் செலவிட்ட மிகப்பெரிய தொகையாக எலான் மஸ்க் செலவிட்ட தொகை கருதப்படுகிறது. எனினும், மஸ்க்கின் நிதி ஆதரவையும் மீறி ஜனநாயகக் கட்சி பல மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, டெக்சாஸ் மாநில செனட் ஆசனத்திற்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தலாரிக்கோ, குடியரசுக் கட்சியின் கென் பாக்ஸ்டனைத் தோற்கடித்துள்ளார். பாக்ஸ்டனுக்கு ஆதரவாக மஸ்க் குறைந்தது 45 மில்லியன் டொலர்களைச் செலவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அரிசோனா, மிச்சிகன், விஸ்கொன்சின் மற்றும் மின்னசோட்டா உள்ளிட்ட மாநிலங்களிலும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு மஸ்க் நிதியுதவி வழங்கியிருந்தார்.
இதனிடையே, தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் அரசியல் பதிவுகளைக் குறைத்துக்கொண்ட மஸ்க், தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI உருவாக்கிய GrokBot தொடர்பான பதிவுகளில் கவனம் செலுத்தியுள்ளார்.
அத்துடன், நேற்றைய வர்த்தகத்தில் டெஸ்லா பங்குகள் 4.9 சதவீதத்தாலும், ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் 3.4 சதவீதத்தாலும் சரிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன