ஈரானுக்குள் புகுந்து 2-வது வீரரையும் மீட்ட அமெரிக்கா
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E Strike Eagle போர் விமானத்தில் பயணித்த அமெரிக்க விமானிகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த விமானிகளில் ஒருவரை உடனடியாக அமெரிக்கா மீட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது விமானியை மீட்கும் முயற்சியில், அமெரிக்க பாதுகாப்புப் படைகள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டது.

அமெரிக்க அதிபர் Donald Trump தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட தகவலின் படி, இரண்டாவது வீரர் லேசான காயமுடன் மீட்கப்பட்டு நல்ல உடல் நலத்தில் உள்ளார்.
அவர் ஈரான் மலைப்பகுதியில் தஞ்சமடைந்திருந்த போதே அமெரிக்க வீரர்கள் திட்டமிட்டு மீட்டனர். இந்த நடவடிக்கையில் ஏராளமான அமெரிக்க விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டதாகவும், வீரரின் இடம் 24 மணி நேரமாக கண்காணிக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் மீட்பு நடைபெற்றதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான், இதற்கு மாறுபட்ட கருத்தை வெளியிட்டு, அமெரிக்காவுக்குச் சொந்தமான 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் சில ட்ரோன்களை ஈரான் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும், 5 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் மற்றும் தீப்பிடித்த ஹெலிகாப்டர்கள் படங்களையும் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க அரசு இதுவரை ஈரான் கூறிய 4 விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் குறித்து உறுதி செய்யவில்லை.
இந்த மீட்பு நடவடிக்கை, எதிரி நாட்டுக்குள் புகுந்து இரண்டு வீரர்களை மீட்டதாக அமெரிக்கா கூறும் துணிச்சலான செயல்பாடுகளில் ஒன்றாகும்.