மூன்று நாள் விஜயத்தில் அமெரிக்க விமானப்படை தளபதி இலங்கை வருகை
அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் கட்டளை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (21) இலங்கை வந்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையின் வளர்ந்து வரும் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் ஜெனரல் கெவின் ஷ்னைடர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படையைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது வான் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு, இணையப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விஜயம், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.