பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யுவான் வாங் கப்பல் ; இலங்கைக்கு சீனாவிடமிருந்து அவசர அறிவிப்பு!
பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீன யுவான் வாங் கப்பல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யுமாறு இலங்கைக்கான சீன தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்தது.
இக்கப்பலின் வருகை குறித்து இந்திய அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு இது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தது.
குறித்த கப்பல் நாட்டிற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த போதிலும், பதற்றமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு கப்பல் வரும் திகதியை ஒத்திவைக்குமாறு வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கப்பலின் பயணம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் நிலை தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் சீனத் தூதரகம் இலங்கை அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.