பிக்குகள் - அதிகாரிகள் முறுகல் ;விஹாரமகாதேவி பூங்காவில் இன்று அமைதியின்மை
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போராட்டப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பௌத்த கொடிகள், அறிவிப்புப் பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற அதிகாரிகள் முயற்சித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிக்குகள் அதிகாரிகள் முறுகல்
பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள், குறித்த கொடிகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை அகற்றுமாறும் அல்லது அவற்றை நிறுவுவதற்கான கட்டணத்தைச் செலுத்துமாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களிடம் அறிவித்துள்ளனர்.
அவ்வாறு செய்யத் தவறினால், அவற்றைத் தாங்களே அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தேரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதனையடுத்து, அதிகாரிகள் சில பதாகைகளை அகற்றியபோதும், அங்கிருந்த தேரர்களும் பொதுமக்களும் அவற்றை மீண்டும் அதே இடத்தில் நிறுவியுள்ளனர்.