ஆதிசிவன் பூமியை காக்க களமிறங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்!
முல்லைத்தீவு தண்ணீர் முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு கவனயீர்ப்பிலும் ஈடுபட்டது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம்
இதன்போது வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம், பிரிக்காதே பிரிக்காதே தமிழர் தாயகத்தை பிரிக்காதே, குருந்தூர் மலை எங்கள் மலை, அநீதி இழைக்கும் தொல்லியல் திணைக்களமே வெளியேறு,
எமது நிலம் எமக்கு வேண்டும், சர்வதேச நீதி வேண்டும், தமிழர்களின் மதவழிபாட்டுரிமையை தடை செய்யாதே, அடாவடி தொல்லியல் திணைக்களமே வெளியேறு, ஆதிசிவன் தமிழர்களின் சொத்து என கோஷத்தை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், காலங்காலமாக தமிழர் பிரதேசத்தில் நில அபகரிப்புக்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இவ்வாறான தமிழரின் உரிமை மீறல்களை பொதுமக்கள்,பொது அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகள் எந்தவித பாகுபாடின்றி இணைந்து செயற்பட்டு தொடர்சியான இவ் உரிமை மீறலை நிறுத்தவேண்டும்.
சர்வதேசம் இவ்வாறான அரசின் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என கூறினார்.
நீதிமன்றத்தால் குருந்தூர் மலையில் விகாரைக்கான நிர்மாண பணிகளை முன்னெடுக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாம் இங்கு வந்து பார்க்கின்ற பொழுது சீமெந்து வேலைப்பாடுகள் இடம்பெறுகின்றன.
இங்கு நீதி மீறப்படுகின்ற நிலையில் இச்செயற்பாடுகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறதாகவும் அவர் கூறினார்.
இந்த கவனயீப்பில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ் ஜெல்சின், யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார் , பல்கலைக்கழக மாணவர்கள், தவத்திரு வேலன் சுவாமிகள், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் முருகையா கோமகன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.