உணவுப்பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமெரிக்கா
ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் ஆகியவற்றைப் பேணிவளர்ப்பதற்கான தமது பரந்துபட்ட இலக்கின் ஓரங்கமாக இலங்கையின் விவசாயத்துறைசார் அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை வழங்குவதன் ஊடாக நாட்டின் உணவுப்பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க விவசாயத்திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாயம்சார் விவகாரங்களுக்கான துணைச்செயலர் அலெக்சிஸ் டெய்லருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (26) கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கும் கலந்துகொண்டிருந்தார்.
இலங்கையின் விவசாயத்துறைக்கு அமெரிக்க விவசாயத்திணைக்களம் வழங்கிவரும் உதவிகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பில், உணவுப்பாதுகாப்பை மேம்படுத்தல்,
காலநிலைமாற்ற சவால்களுக்கு எதிரான மீண்டெழும் தன்மையை ஊக்குவித்தல் என்பவற்றின் ஊடாக இலங்கையின் விவசாய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா கொண்டிருக்கும் வலுவான உறுதிப்பாட்டினை துணைச்செயலர் அலெக்சிஸ் டெய்லர் வெளிக்காட்டினார்.
அத்தோடு சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் ஊடாக உணவுப்பாதுகாப்பு மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிரான மீண்டெழும் தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் '2024 முன்னேற்றத்துக்கான உணவு' எனும் திட்டத்தில் ஒரு முன்னுரிமை நாடாக இலங்கை வகிக்கும் முக்கிய பங்கு குறித்தும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது.
அதுமாத்திரமன்றி இலங்கையில் 15,000 க்கும் மேற்பட்ட பாற்பண்ணையாளர்களுக்கு அவர்களது பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவிய 27.5 மில்லியன் டொலர் பெறுமதியுடைய 'சந்தையை மையப்படுத்திய பாலுற்பத்தி' எனும் செயற்திட்டம் பற்றியும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் ஆகியவற்றைப் பேணிவளர்ப்பதற்கான தமது பரந்துபட்ட இலக்கின் ஓரங்கமாகவே இலங்கைக்கு இவ்வுதவிகளை வழங்கியிருப்பதாகவும், இதனூடாக நாட்டின் உணவுப்பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளது.