மட்டக்களப்பில் சுகாதாரமற்று இயங்கிய உணவகமொன்றுக்கு சீல்
மட்டக்களப்பு நகரில் உள்ள சுகாதாரமற்ற உணவகமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 50 ஆயிரம் ரூபா அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்று உணவுக் கொள்வனவுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்படுகின்றமை உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பொருத்தமற்ற உணவுகள்
இந்நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததோடு, 14 நாட்களுக்கு உணவகத்தை மூடி சீல் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது. மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை முற்றுகையிட்டு, சோதனை நடத்தி, மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வழங்கி வந்துள்ளதை கண்டறிந்து கடை உரிமையாளருக்கு எதிராக 3வது தடவையாக இன்று வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் உள்ள உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, பீடைகள், தொற்றுக்கள் ஏற்படும் விதமாக உணவு உற்பத்தி செய்யும் இடங்கள் காணப்பட்டமை, தூய்மையற்ற சுற்றுப்புறங்கள், மலசலகூடத்துக்கு மிக அருகில் உணவு உற்பத்தி செய்தமை, உணவு உற்பத்தி செய்யும் இடமானது திண்ம, திரவ, வாயுக் கழிவுகளை அப்புறப்படுத்த முடியாத இடப்பரப்பாக காணப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.