ஹோட்டல் அறையில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் வீரர்களின் மோசமான செயல்
கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்களை ரகசியமாகப் படம்பிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த விடுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட பெண் மருத்துவர்கள் சிலர், தாங்கள் குளிக்கும் தருணங்களை சந்தேகநபர்கள் தங்களது கைபேசிகள் மூலம் ரகசியமாகப் பதிவு செய்ததாக நாரஹேன்பிட்டி பொலிஸாரின் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரு வீரர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
மேலும், அதே இடத்தில் தங்கியிருந்த பிற நபர்களும் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அந்த காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கைது செய்யப்பட்ட இருவரும் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், தலா ரூ.5 இலட்சம் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.