தமிழர் பகுதியில் 11 வயது சிறுமிக்கு பெரியப்பா செய்த தகாத செயல் ; அதிரடி காட்டிய நீதிமன்றம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயது சிறுமியைக் கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 37 வயதுடைய குற்றவாளிக்கு 25 வருட சாதாரண சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

சிறைத்தண்டனை
இவ்வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டவருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (09) இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.
குற்றவாளிக்கு எதிராக சிறுமியைக் கடத்திச் சென்றமை மற்றும் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 04 ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சட்டமா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமியால் "பெரியப்பா" என அழைக்கப்படும் சந்தேக நபர் கடந்த மாதம் 25 ஆம் திகதி குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை வழங்கும் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.
இதன்படி, வழக்கின் தண்டனைத் தீர்ப்பாக முதலாவது குற்றமான, பெற்றோருக்குத் தெரியாமல் சிறுமியைக் கவர்ந்து சென்றமைக்காக 10 வருடங்களும், இரண்டாவது குற்றமான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்காக 15 வருடங்களுமாக மொத்தம் 25 வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 01 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், அந்த நஷ்டஈட்டைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டப்பணமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.