வீட்டுத் தோட்டத்தில் காத்திருந்த ஷாக் ; நீண்டகாலம் அரங்கேறிய செயல் அம்பலம்
துபாயில் தலைமறைவாக இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ‘பெலிசானா’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர், ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குட்டிகல காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மொத்தமாக 23 கிராம் 325 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வலையமைப்பு
குட்டிகல காவல்நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறை மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 7 கிராம் 625 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குட்டிகல, படலங்கல மற்றும் எம்பிலிப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் சந்தேகநபர்கள் நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.