உணவை மென்று உண்பதால் உடல் ஆரோக்கியத்தில் இத்தனை நன்மைகளா?
உணவின் சுவை அறிந்து உடல் ஆரோக்கியத்துக்கும் நாம் உணவை மென்று சாப்பிட வேண்டும். தற்போது இருக்கும் பணி சுமைகளுக்கு மத்தியில் உணவுகளை மென்று சாப்பிட வேண்டும் என்பதை நம்மில் பலரும் மறந்து விட்டோம்.
அதன் படி உணவை மென்று சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என நாம் இங்கு பார்போம்.
உணவின் சுவையை அறிய மென்று சாப்பிட வேண்டும்
ஒரு உணவின் சுவையை அறிந்து கொள்வதற்கு அந்த உணவை நன்றாக மென்று சாப்பிடுவது அவசியம். நாம் உண்ணும் உணவுப் பொருட்களின் அடிப்படையில் எத்தனை முறை மென்று சாப்பிட வேண்டும் என்று இருக்கிறது. பழங்கள் சாப்பிடும் போது குறைந்தது ஏழு முறையாவது மென்று சாப்பிட வேண்டும். மற்ற உணவுகளாக இருந்தால் குறைந்தது 20 முதல் 30 முறை வரை மென்று சாப்பிட வேண்டும்.
செரிமான ஆரோக்கியம்
நாம் உண்ணும் உணவு முதலில் வாய்ப்பகுதியிலேயே உடைக்கப்பட்டு சிறு துண்டுகளாக மாற்றப்பட வேண்டும். உணவு கூழ்ம நிலைக்கு வந்த பிறகு அதனை விழுங்க வேண்டும். பற்களுக்கான வேலைகளை கொடுப்பதன் மூலம் பல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. விழுங்கும் உணவு தசைப்பகுதிகளுக்கு சென்று ரசாயனங்களின் மூலம் செரிமானம் செய்யப்படுகிறது. நன்றாக மென்று உணவினை உட்கொள்ளும் போது எளிதில் செரிமானம் ஆகிறது. செரிமான அமைப்புகளிலும் இயக்கங்கள் குறைவாக நடைபெறுகிறது. இது ஆரோக்கியமான உடல் இயக்கங்களுக்கு உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள் எளிதல் உரிஞ்சப்படும்
உணவை நன்றாக மென்று விழுங்குவதன் மூலம் நேரடியாக உணவு வயிற்றுப் பகுதிக்கு தள்ளப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் போதுமான அளவு செரிமானம் செய்யப்படும் இந்த உணவுகள் அடுத்து குடல் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இங்கு இரசாயனங்களுடன் கலந்து மிக எளிதாக செரிமானம் செய்யப்படுகிறது. மேலும் உணவினை நன்றாக மென்று விழுங்குவதன் மூலம் ஊட்டச்சத்துக்களையும் உடலானது எளிதில் உறிஞ்ச முடிகிறது.
அதிகமாக உணவு உண்பது தடுக்கப்படுகிறது
உணவினை நன்றாக மென்று விழுங்குவதன் மூலம் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளல் தடுக்கப்படுகிறது. மேலும் உணவின் சுவையையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது உணவு உண்பதற்கு நேரம் ஒதுக்காமல் மற்ற பணிகளுக்கு அதிக நேரத்தை ஒதுக்கிக் கொண்டிருக்கிறோம். உணவினை மென்று விழுங்குவது செரிமான ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையை நிர்வகிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் உணவினை மென்று சாப்பிடுவது அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடுவதில் இருந்து தடுக்க உதவும்.