டிவி வரலாற்றில் முதல் முறை ; ஈழத் தமிழருக்காக யாழில் இருந்து நேரலையில் இறுதிப் போட்டி
சன் டிவி ஒளிபரப்பும் சமையல் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்காக, ஈழத் தமிழர் ஒருவருக்காக இலங்கையின் யாழ்ப்பாணத்திலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்ட சம்பவம் வியப்பூட்ட வைத்துள்ளது.
ஈழத்து ராப் பாடகர் வாகீசன், சன் டிவியின் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தேர்வாகியிருந்தார். ஆனால் அவருக்கு இந்திய அரசு விசா வழங்கப்படாததால், இறுதிப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, சன் டிவி தனது படக்குழுவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி, வாகீசன் பங்கேற்கும் வகையில் அங்கிருந்தே படப்பிடிப்பை நடத்தி ஒளிபரப்பியது.

இறுதிப் போட்டியில் பங்கேற்கும் ஒரே ஒரு போட்டியாளருக்காக மற்றொரு நாட்டிற்கு சென்று நிகழ்ச்சி ஒளிபரப்பியமை, தொலைக்காட்சி வரலாற்றில் அபூர்வமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்குப் பின்னால் வரும் தேர்தல் அரசியல், புலம்பெயர் தமிழர்களின் சந்தை, அல்லது ஈழத் தமிழர் விவகாரங்களில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் அரசியல் இயக்கங்களின் தாக்கம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
எந்த காரணம் இருந்தாலும், ஈழத் தமிழர் ரப் பாடகர் வாகீசனுக்கு இவ்வாறு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக பலரும் பாராட்டுகின்றனர்.
இந்த நிகழ்வு அவரை கோடிக்கணக்கான மக்களிடையே அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், அவர் பாடிய “வண்ண மயில் ஏறும்” பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் ரீல்கள் மூலம் பரவலாக வைரலாகி வருகிறது.