AI தொழில்நுட்பத்தால் பெண்கள் வேலையிழக்கும் அபாயம்!
உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வின்படி, உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21 வீதம் பேரின் வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, இந்த பாதிப்பு விகிதம் 28 வீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்கும்
இந்த மாற்றம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் குறிப்பிடுகிறது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவரும் சூழலில், இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
நிறுவனங்கள் ஏஐ காரணமாகப் பணிநீக்கம் செய்யவில்லை என்று கூறினாலும், மறைமுகமாக ஏஐ-யின் பயன்பாடு ஒரு முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது.
ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளைச் செய்யும் வேலைகளை தானியங்கிமயமாக்குவதால், இத்தகைய வேலைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.