உக்ரைனில் பல இடங்களில் மீண்டும் குண்டு மழை! பாரிய அச்சத்தில் மக்கள்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று திங்கட்கிழமை (28-02-2022) மாலையில் ரஷ்ய துருப்புகளுக்கும் உக்ரைனிய படையினருக்கும் இடையே புதிதாக சண்டைகள் நடப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். பல நகரங்களில் ரஷ்யப் படைகள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
செர்னோபில் உள்ள ஒலெக் ஸ்விஸ்ட், சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தனது நகரம் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறினார்.
"எல்லா இடங்களிலிருந்தும் நான் வெடிக்கும் சத்தங்களைக் கேட்கிறேன்," என்று அவர் கூறுகிறார். அந்த சத்தம் "என்னைச் சுற்றி ஒரு வட்டம் போல" கேட்கிறது. "இது நான் வசிக்கும் பகுதியில் இருந்து வெகு அருகே கேட்கிறது. அதாவது அந்த இடம் வெகு தொலைவில் இல்லை.
அவர்கள் செர்னோபில் மையப் பகுதியில் குண்டு வீசுகிறார்கள்" என்று கூறுகிறார் 48 வயதான தகவல் தொழில்நுட்ப நிபுணர். தனது தாய்நாட்டைக் காக்க ரஷ்ய வீரர்கள் மீது "சுட" தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஒவ்வோர் 20 நிமிடங்களுக்கும் வெடிகுண்டு தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார், இனி தப்பி ஓடி பங்கருக்குள் மறைவதற்கு கூட அவகாசம் இல்லை என்கிறார் அவர். அப்படி செய்வது "இனி சாத்தியமற்றது.
யாரும் அதைச் செய்யப்போவதில்லை" என்று கூறும் அவர், மாறாக, ஆயுதங்களைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
இவரது வீட்டிற்கு அருகில் கலாஷ்னிக்கோவ் இயந்திர துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைப் பெற மக்கள் கூடும் பகுதி உள்ளதாகவும் அங்கு ஆயுதங்களை வாங்க எல்லா வயதினரும் வருவதாகவும் ஒலெக் ஸ்விஸ்ட் கூறுகிறார்.