ரஷ்யா - உக்ரைன் போர்: சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள்!
உக்ரைன் - ரஷ்யா இடையே 5ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இந்தத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு போலியான படங்களும் காணொளிகளும் வெளியாகி வருகின்றன.
எளிதில் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியாதபடி, பழைய ராணுவத் தாக்குதல்களின் படங்கள், வைரல் காணொளிகளும் பகுதிகள் ஆகியவை பரப்படுகின்றன.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முந்தைய பழைய காணொளி என்று பிபிசியால் உறுதி செய்யப்பட்ட ஒரு காணொளி ஒரே நாளில் 27 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கிடையில் சில காணொளி கேம் காட்சிகளும் கூட உலா வருகின்றன.
இதுபோன்ற தவறாக வழிநடத்தவல்ல பதிவுகள் அதிகாரப்பூர்வ கணக்குகள் மற்றும் சாதாரண பயனர் கணக்குகள் என இரண்டின் மூலமாகவும் வெளியிடப்படுகின்றன. உதாரணமாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் சரிபார்க்கப்பட்ட ருவிட்டர் கணக்கிலிருந்தே இம்மாதிரியான ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது.

இரு போர் விமானங்கள் மோதும் காட்சியை பதிவிட்டு அத்துடன் "மிக்-29 ரக போர் விமானம் ரஷ்யப் படையின் சு-35 ரக போர் விமானத்தை தாக்கி அழித்தது" என்ற எழுதப்பட்டு இந்த ட்வீட் வெளியிடப்பட்டது.
ஆனால், உண்மையில் இது டிஜிட்டல் காம்பேட் சிமுலேட்டர் வேர்ல்டு ( Digital Combat Simulator World) என்ற ஒரு காணொளி-கேமின் காணொளி. அட்ஃஏ சமயம், காணொளி கேமின் துணுக்குகளை ராணுவ நடவடிக்கையாக பதிவிடுவது ஒன்று புதியதல்ல.

அதேபோல, டிக்டாக் தளத்தில் பிழையாக தலைப்பிடப்பட்ட பழைய காணொளி ஒன்று டிக்டாக் தளத்தில் சுமார் 18 மில்லியன் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டிருந்தது. இந்த காணொளிக்கு உக்ரைனியே படைகள் ரஷ்யப் படைகளுடன் நேருக்கு நேர் மோதியது என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
இந்த காணொளியில் காட்டப்படுவது யுக்ரேன் ரஷ்யா படைகள்தான் என்றாலும், உண்மைத்தன்மை அறியும் குழுக்கள் இது 2014ஆம் ஆண்டு கிரைமியாவை ரஷ்யா கைப்பற்றியபோது, செவஸ்டபோல் பகுதிக்கு அருகில் உள்ள பெல்பெக் விமானப்படைத் தளத்த்தில் எடுக்கப்பட்ட காணொளி என்று தெரிவித்தனர். இந்த காணொளி, 2014இல் சர்வதேச துருக்கி சேவையால் தொலைக்காட்சியிலும் பின்னர் டிஜிட்டலிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதுபோலவே, உக்ரைன் கொடுத்த பதிலடியால், ரஷ்யப் படைகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதம் குறித்த ட்ரோன் காணொளி என்று ஒரு சாதாரண பயனர் ஒருவரது கணக்கிலிருந்து இந்தக் காணொளி முகநூலில் மற்றும் ருவிட்டர் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், உண்மையில் இந்தக் காணொளி ரஷ்யா-உக்ரைன் தொடர்புடையதே அல்ல. 2020 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டது. கூகுள் தேடுபொறியில் புதியது போன்று தெரியவேண்டும் என்பதற்காக இடவல மாற்றம் செய்யப்பட்டு (flipped) பதிவேற்றப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ருவிட்டரிலும் இந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக, தவறான தலைப்பிடப்பட்ட இன்னொரு பழைய காணொளியும் பரவி வருகிறது.

அதாவது, உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் லூஹான்ஸ்க்கில் உள்ள மின் உற்பத்தி ஆலையில் சங்கிலித்தொடர் நிகழ்வு தொடங்கிவிட்டது என்று இந்த காணொளி வெளியிடப்பட்டிருந்தது.
உண்மையில் இந்த காணொளி 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் தேதி சீனாவின் டியாஞ்சின் வெடிப்பு சம்பவத்தில் எடுக்கப்பட்ட காணொளி. இந்தச் சம்பவத்தில் வேதிப்பொருட்கள் இருந்த கலன் வெடித்து சுமார் 173 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான ஆதாரம் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் உள்ளது.
டிக்டாக் வைரல்கள்
டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்றபோதும் உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில்தான் உள்ளது. அந்த வகையில், ஒரு டிக்டாக் காணொளி 27.5 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருந்தது.
காரணம் அந்தக் காணொளி உக்ரைனிலிருந்து வெளியானது என்று நம்பப்பட்டதுதான். அதாவது, ரஷ்யப் படைவீரர்கள் பாராசூட் மூலமாக உக்ரைனுக்குள் இறங்கியதாக அந்தக் காணொளி பரவியது.

ஆனால், உண்மையில் இந்தக் காணொளி ஒரு ரஷ்யப் படைவீரரால் எடுக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது. இந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி இந்த காணொளியை டிக்டாக்கில் பதிவேற்றினார் அவர். இதன் விளைவாகப் பலரும் இதனை உகரைனுக்குள் ரஷ்யா நுழைந்த சம்பவத்தின் புதிய காணொளி என்று நம்பி பகிர்ந்துள்ளனர்.
இன்னும் ஏராளமான பழைய காணொளிக்கள் பரவி வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த ராக்கெட் தாக்குதல் காணொளி. தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் பிரச்னையில் தொடர்புடையது என்று நம்பப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் உண்மை வேறு. இந்தக் காணொளி 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதாவது, 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டிலும் இந்த காணொளி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், இந்த ட்வீட்டுக்கு எழுதப்பட்டிருக்கும் தலைப்பின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் இருக்கவே செய்கிறது.
முடிவுக்கு வரமுடியாது:
சில சமயங்களில் ஒரு வைரலாகும் பதிவின் உண்மைத்தன்மையை முற்றிலுமாக உறுதி செய்ய முடியாது. அதற்கான உதாரணம் தான் இந்த க் காணொளி. தாழப்பறக்கும் ஒரு போர்விமானத்தில் இருந்து கீயவ் நகரக் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஏவுகணைத் தாக்குதல் நடக்கிறது.
ட்விட்டரில் இந்தக் காணொளி இதுவரை 2 மில்லியன் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
வேகமாகப் பறக்கும் விமானம், மிகமிகக் குறைந்த தரத்தில் தெளிவற்று இருக்கும் காட்சிகள் என எந்த நாட்டு விமானம் என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது இந்தக் காணொளி.
அதேசமயம், இந்த ஏவுகணைத் தாக்குதல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதா அல்லது தவறுதலாக ஏவப்பட்டதா என்ற விவாதமும் உள்ளது.
உண்மையா? கற்பனையா?
போர் போன்ற, உடனுக்குடன் அதிவேகமாக மாறும் தொடர் நிகழ்வுகளைக் கொண்ட சம்பவங்களின் போது சமூக வலைதளங்களில் தொடரும் இது போன்ற போலி பதிவுகளும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.
தவறான தகவல்கள் எளிதில் நம்பப்பட்டு, நம்பியவர்களால் பகிரப்பட்டும் விடும். எதையும், பகிர்வதற்கு முன்னர் ஒரு நொடி இது ஏன் பொய்யாக இருக்கக்கூடாது என்றும் இது நம்பத்தகுந்த பதிவா என்றும் சிந்தித்தால் பொய்யான தகவல்கள் பரவுவதை சமூக வலைதளப் பதிவர்கள் கட்டுப்படுத்த முடியும்.
மேலும், கூடுதலாக சில நம்பத்தகுந்த தளங்களில் சோதித்துக் கொள்வதும் இதுபோன்ற போர்ச்சூழலில் போலிப்படங்கள், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கும்.