உக்ரைனை கைப்பற்றினாலும் ரஷ்யாவால் நிம்மதியாக இனி இருக்க முடியாது?
உக்ரைன் நாட்டை ஆக்கிரமிப்பது, ரஷ்யா நினைத்தது போல இலகுவானதல்ல எனத் தோன்றுகிறது.
அகதியாக வெளியேறுவோரை விட ஆயுதத்தை கையிலெடுத்த குடிமக்கள் உக்ரைனில் அதிகரித்து விட்டனர். உக்ரைன் மக்களும் ரஷ்யரை போலவே போர்களுக்கு முகம் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்தான்.
அவர்களும் முன்னாள் ரஷ்ய நாட்டவர்களே. அகதி பிரச்சனை, மக்கள் குடியிருப்புகளை தாக்குதல், பொது மக்களின் உயிரிழப்புகள் என உலக மக்களின் அதிருப்தி ஆகியவை ரஷ்யாவை தனிமைப்படுத்தும் போது உக்ரைனுக்கு உலக ஆதரவு அதிகரிக்கும்.

அதை வைத்தே உலக நாடுகள் காய் நகர்த்துவது இயல்பு. அத்தோடு உக்ரைனை அண்டிய நாடுகள் நேட்டோவில் இணைந்திருப்பதால், அடுத்து அவர்களுக்கும் ரஷ்யா பிரச்சனையாகலாம்.
எனவே அந்நாடுகளும் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கலாம். அது இப்போதே ஆரம்பித்துள்ளது.
ஐநாவிலும், ரஷ்யாவுக்கு ஆதரவு குறைந்தே உள்ளது. ரஷ்யா நாட்டிற்கு உள்ளேயும், போரை எதிர்க்கும் ரஷ்ய மக்களது தொகை அதிகரித்துள்ளது. அநேக ரஷ்யர்களும் போரை விரும்பவில்லை. போர் மேகங்கள் இப்போதைக்கு முடிவுக்கு வராது.

ஆனால் ரஷ்யாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியும் எனத் தோன்றவில்லை. காரணம் இலகுவாக கைப்பற்றி விடுவார்கள் என நினைத்த கிவ் தலைநகரை கைப்பற்றும் முயற்சி ரஷ்யாவுக்கு பெரும் தோல்வியாக முடிந்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. ரஷ்யா ஆக்கிரமிப்பை நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தை ஒன்றுக்கு வந்து, போர் நிறுத்த வழிக்கு வருவதே இப்போதைக்கு சிறந்தது.
ஆனாலும் உக்ரைன் மக்கள் மனதில் ரஷ்யாவால் இடம் பிடிக்க முடியாது. அந்த மக்கள் ரஷ்யாவை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். உக்ரைனில் வாழும் ரஷ்யர்கள் கூட ரஷ்யாவை எதிரியாகவே பார்க்க தொடங்கிவிட்டனர்.
இது ரஷ்யாவுக்கு கெட்ட பெயர்தான்.
ரஷ்யா , உக்ரைனை கைப்பற்றினாலும் ரஷ்யாவால் நிம்மதியாக இனி இருக்க முடியாது போகலாம்? என மூகநூலில் ஜீவன் பிரசாத் என்ற நபர் பதிவிட்டுள்ளார்.