வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக போராட்டம்
நுவரெலியாவில், வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்தக் கோரியும், உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை வீழ்ச்சியைக் கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நுவரெலியா விசேட பொருளாதார நிலையத்தை மூடி இன்று மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலை வீழ்ச்சி
அத்துடன், விலை வீழ்ச்சியைக் கண்டிக்கும் விதமாக, விவசாயிகள் தேங்காய் உடைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், நுவரெலியாவில் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய விவசாயிக்குக் குறைந்தபட்சம் 200 ரூபாய் செலவாகிறது என தெரிவித்தனர்.
ஆனால், சந்தையில் அவர்கள் ஒரு கிலோ உருளைக்கிழங்கை 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது. இதனால் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறினர்.
வெளிநாட்டு உருளைக்கிழங்கு இலங்கைக்கு வரும்போதே முளைப்பதற்குக் தயாராக இருப்பதாகவும், போதிய சூரிய ஒளி இன்மையால் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் அவை பல்வேறு நிறங்களில் மாறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், அவை பூச்சிகளால் சேதப்படுத்தப்பட்டு, நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு இலங்கைக்கு வருவதாகவும், இதன் காரணமாகவே அவை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை குறைந்த விலைக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் வெளிநாட்டு உருளைக்கிழங்கையே மக்கள் அதிகம் கொள்வனவு செய்கின்றனர் எனவும் இதன் காரணமாகவே நுவரெலியா உருளைக்கிழங்கின் விற்பனை குறைந்து விலையும் வீழ்ச்சி அடைவதாக விவசாயிகள் கூறினர்.
எனவே, ஜனாதிபதி இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலையை உறுதி செய்யாவிட்டால், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் கொழும்பில் ஒன்றிணைந்து போராடத் தயாராக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.