தமிழினப் படுகொலைகளை நினைவூட்டும் உக்ரைன் பேரழிவுகள்!
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் அனுபவித்த துயரங்களை உக்ரைன் பேரழிவுகள் நினைவூட்டுவதாக கனடிய தமிழர் தேசிய அவை தெரிவித்துள்ளது.
நெருக்கடியான இந்த நிலையில் தமிழ் கனடியர்கள் உக்ரேனிய மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக கனடிய தமிழர் தேசிய அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தாலும் அதன் இரக்கமற்ற ஆயுதப் படைகளாலும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகள் மற்றும் நண்பர்கள் பற்றிய மிகவும் வேதனையான நினைவுகளை உக்ரைனில் வெளிவரும் இந்த பேரழிவு சூழ்நிலைகள் தமிழ் மக்களுக்கு மீண்டும் நினைவூட்டுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் உக்ரைனில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. அத்துடன் உக்ரேனிய மக்களின் துன்பங்களும் மரணமும் கற்பனை செய்ய முடியாதவை. இது மிகவும் கவலையளிக்கிறது.
இந்த நேரத்தில் உக்ரேனிய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை உக்ரைனில் இனப்படுகொலைக்கு திட்டமிடுவதாக குற்றம் சாட்டி ரஷ்யா மீது உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மக்களுக்கு எந்தவொரு தீங்கும் ஏற்படாமல் தடுக்கவும், இனப்படுகொலையை தடுக்கவும், தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அவர்களின் உரிமையை பாதுகாக்கவும் சர்வதேச சமூகம் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் ஜனநாயக அரசு மற்றும் அதன் மக்கள் மீதான ரஷ்ய அரசாங்கத்தின் வலிந்த தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் எனவும் கனடிய தமிழர் தேசியஅவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.