யாரும் எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்த பிரித்தானிய பொருளாதார வளர்ச்சி!
ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில், யாரும் எதிர்பாராத வகையில், பொருளாதார வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் வலுவடைந்துள்ளது.
பிரித்தானியாவில் மந்தமான பொருளாதார வளர்ச்சி, தற்போது அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியின் மையப் புள்ளியாக உள்ளது.
இந்த நிலையில், மே மாதத்தில் வலுவான வளர்ச்சி காணப்பட்டிருப்பதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மே மாதத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது, 0.1 சதவீதமாக இருக்கும் என பரவலாக கணிக்கப்பட்டிருந்தது. முந்தைய மாதமான ஏப்ரலில், வளர்ச்சி 0.2 சதவீதமாக இருந்தது.
மே மாதத்தில், நாட்டின் முக்கியமான துறைகளான உற்பத்தி, கட்டுமானம், சேவைகள் ஆகிய மூன்றிலும் நல்ல வளர்ச்சி பெறப்பட்டுள்ளது என, புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், பிரித்தானிய தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்த தரவுகள் மாறக்கூடியவை என எச்சரித்துள்ளது.
மேலும், உண்மையில் கூட்டமைப்பின் ஆய்வுகள், பொருளாதார வளர்ச்சி குன்றுவதை காட்டுவதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிரித்தானியாவின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.