உகாண்டா கால்பந்து அணியின் தலைவர் அடித்துக் கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி
உகாண்டா கால்பந்து அணியின் தலைவர் டேவிட் ஓவோரி தெருவில் வன்முறையாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உகாண்டாவின் கம்பாலா பகுதியில் பிறந்த டேவிட் ஓவோரி உகாண்டா பிரிமீயர் லீக்கில் எஸ்சி வில்லா அணியில் மிட் ஃபீல்டராகவும் தலைவராகவும் விளையாடி வந்தார்.
டேவிட் ஓவோரி கம்பாலாவில் இருக்கும் தனது வீட்டில் இருக்கும்போது, திருடர்கள் அவரது செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார்கள். இதில் நடந்த மோதலில் அவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் திருடர்கள் தப்பியோடியதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
“அவர் கால்பந்து வீரர் மட்டுமல்ல, அவர் ஒரு தலைவர், ஒரு தலைமுறைக்கே உத்வேகம் அளித்தவர். நாட்டின் நம்பிக்கையை தூக்கிச் சுமந்தவர்.
நாம் நமது மகனை, தலைவனை, நட்சத்திரத்தை இழந்துள்ளோம். அவர் களத்தில் இருந்ததை நாம் மறக்கவே முடியாது.
இந்தப் பெரும் இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கும் எஸ்சி வில்லா அணிக்கும் அளிக்க கடவுளை வேண்டிக்கொள்கிறோம்.” என உகாண்டாவின் தேசிய கால்பந்து அணி கூறியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.