மோட்டார் சைக்கிள் திருடி பிடிபட்ட இரு இளைஞர்கள் ; விசாரணையில் வெளியான தகவல்
மோட்டார் சைக்கிள்கள், செப்புக் கம்பிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர், ஆடியம்பலம பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளொன்றை பாகங்களாக கழற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனையிட்டுள்ளனர்.

திருட்டுச் சம்பவங்கள்
இதன்போது, அவரிடமிருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் பாகங்களாக கழற்றிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி வேயங்கொடை பகுதியில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய மற்றைய சந்தேகநபரும் பின்னர் சீதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் ஆடியம்பலம மற்றும் சீதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற இரண்டு செப்புக் கம்பி திருட்டுச் சம்பவங்கள், ஒரு கையடக்கத் தொலைபேசி திருட்டுச் சம்பவம் மற்றும் சீதுவ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.