விமான நிலையத்தில் இந்திய பிரஜைகள் இருவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஐம்பத்து மூவாயிரத்து இருநூறு (53,200) சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்றிரவு (18) வானூர்தி நிலைய வருகை முனையத்தில் இரண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
25,000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் (125 அட்டைப் பெட்டிகள்) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சோதனையின்போது, மற்றொரு சந்தேக நபர் 28,200 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் (141 அட்டைப் பெட்டிகள்) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 26 வயதுடைய இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வானூர்தி நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.