இரண்டு கோடி பெறுமதியான ஆப்பிள் மிருக காட்சி சாலைக்கு
இரண்டு கோடி பெறுமதியான ஆப்பிள் கொழும்பு தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 கிலோ கிராம் ஆப்பிள் தொகையை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாமை காரணமாக தேங்கியிருந்தது.
இந்நிலையில் அதனை கொழும்பு தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு வழங்குவதற்கு துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவின் தீர்மானத்திற்கு அமைய தெஹிவளை மிருககாட்சிசலையின் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
கொழும்பு சர்வதேச துறைமுகத்தின் சி.அய்.சி.டி பகுதிக்கு கடந்த பெப்ரவரி மாதம் சீனாவில் இருந்து குறித்த ஆப்பிள் கொள்கலன்கள் (கென்டய்னர்கள்) கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிள் கொள்கலன்களை அதனை இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே அவர் மிருககாட்சிசாலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.
இது போன்று இன்னும் பல பொருட்களை அவை வீணாக்கப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதனை பிரயோசனமான ஒரு விடயத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
கொள்கலன்களில் 24000 கிலோ கிராம் எடை கொண்ட அதாவது சுமார் ஒரு இலட்சம் ஆப்பிள்கள் இருப்பதாக சி.அய்.சி.டி நிறுவனத்தின் பிரதானி ஜெக் உவாங் தெரிவிக்கின்றார்.
அந்த ஆப்பிள் தொகையின் பெறுமதி சுமார் இரண்டு கோடி பெறுமதி வாய்ந்தவை என துறைமுகத்தின் பணிப்பாளர் பிரபாத் ஜயன்த தெரிவித்தார்.