வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் அதிரடி கைது ; ஆடைகளுக்குள் காத்திருந்த அதிர்ச்சி
14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக வெளியேற முயன்ற போதே, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள்
இன்று( 18) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோகிராம் 562 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆடைகளுக்கு இடையே மிகவும் நுணுக்கமான முறையில் 28 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த போதைப்பொருள் தொகையை சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு - தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் 23 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.