பாவனைக்குதவாத பெருந்தொகை தேங்காய் எண்ணெய்யுடன் இருவர் கைது
மனித பாவனைக்குதவாத 15,620 லீற்றர் தேங்காய் எண்ணெய்யுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மின்னேரியா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணை
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொழும்பிலிருந்து பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையம் ஒன்றிற்காக இந்த தேங்காய் எண்ணெய்யை லொறியில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து மனித பாவனைக்குதவாத 15,620 லீற்றர் தேங்காய் எண்ணெய் அடங்கிய 35 பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.