விசேட சுற்றிவளைப்பால் போதைப்பொருள், வல்லப்பட்டையுடன் இருவர் கைது
கிருலப்பனை மற்றும் மாத்தறை - வெலிப்பிட்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு விசேட சுற்றிவளைப்புகளின் போது, பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் வல்லப்பட்டை மரக்கட்டைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கோனஹேன விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கிருலப்பனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கூட்டுச் சோதனையின் போது 5 கிலோகிராம் 'ஹஷிஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள்
இதன்போது ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 3 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் வெலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு கூட்டுச் சோதனையில், சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 136 கிலோகிராம் வல்லப்பட்டை மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது வல்லப்பட்டை மரத்திலிருந்து எண்ணெய் எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் விசேட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.