கைதான UDA உயர் அதிகாரிகள் இருவருக்கும் பிணை
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் காணி பணிப்பாளர் நாயகம் சம்பத் சுமேத பூஜித ரத்நாயக்க மற்றும் முன்னாள் காணி பணிப்பாளர் வீரவன்ச பெரேரா ஆகிய இரு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (11) உத்தரவிட்டார்.
அரசாங்கத்திற்கு 29.5 மில்லியன் ரூபாவிற்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வெளிநாடு செல்வதற்கு தடை
இந்நிலையில் இருவரையும் தலா 100,000 ரூபாய் ரொக்கப் பிணையையும் தலா 2.5 மில்லியன் ரூபாய் தனிப்பட்ட பிணையையும் விதித்த நீதவான், சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தார்.
2016 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு 05, மயூர வெதவாசவில் அமைந்துள்ள 55.5 பேர்ச்சர்ஸ் நிலத்தை தற்காலிக குத்தகை அடிப்படையில் வழங்கி ஊழல் குற்றங்களைச் செய்ததற்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதனூடாக , நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு 29,519,666.16 ரூபாயை இழந்ததற்காகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.