விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது
நீண்ட காலமாக ஐஸ் போதைப் பொருட்களை சிறுபொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேகநபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (21 ) இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது கல்முனைக்குடி 9ஆம் பிரிவு மதிரிஸா வீதியில் வசிக்கும் 26 வயதுடைய நபர் 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும் கல்முனைக்குடி 2 ஆம் பிரிவு கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர் 870 மில்லி கிராம் போதைப் பொருளுடனும் கைதாகினர்.
கைதான 2 சந்தேகநபர்களையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐஸ் போதைப்பொருள்கள் அதிகளவாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.