அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
வெலிகம கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 21 வயதுடைய துனிசிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (09) காலை வெலிகம பழைய கடை கடற்கரையில் சுற்றுலாப் பயணியின் சடலம் கரை ஒதுங்கியதாக வெலிகமப் பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய கடை கடற்கரையில் நேற்று (08) துனிசிய சுற்றுலாப் பயணிகள் குழு அலைச்சறுக்கு செய்து கொண்டிருந்த போது அப்பகுதியில் பலத்த காற்று காரணமாக கொந்தளிப்பான கடல் நிலைமை மற்றும் பலத்த நீரோட்டம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடல் அலையில் சிக்கி குறித்த சுற்றுலாப் பயணி காணாமல் போனதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன சுற்றுலாப் பயணியைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர் காப்பாளர்கள், கடலோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் தனியார் மூழ்குநர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை பழைய கடை கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வெலிகம தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.