வங்காள விரிகுடாவில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்பரப்புகளில் பலத்த இடியுடன் கூடிய மழை
வடக்கு ஆந்திரக் கடற்கரைக்கு மேலிருந்த தீவிர தாழமுக்கம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இந்தியாவின் கலிங்கப்பட்டினத்திற்கு தென்மேற்கே கரையைக் கடந்துள்ளது.
இன்று (24) காலை 5.30 மணி நிலவரப்படி, குறித்த தாழமுக்கத் தொகுதி காங்கேசன்துறைக்கு சுமார் 1,100 கிலோமீற்றர் வடகிழக்கே நிலைகொண்டிருந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகளில் பலத்த இடியுடன் கூடிய மழையும், மிகவும் கொந்தளிப்பான கடல் நிலையும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே மறு அறிவித்தல் வரை குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அப்பகுதிகளில் உள்ள படகுகள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தாழமுக்கம் இந்தியக் கரையைக் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கத்தால் தென்மேற்குப் பருவக்காற்று வலுவடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.