வேண்டிய வரன் கிட்டவும், கணவன் நீடுழி வாழவும் துளசி பூஜை
துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும் என கூறப்படுகிறது.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர் என்பது நம்பிக்கை.
வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும்.
துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார் என்பது ஒரு ஐதீகம்.
நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால் துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு வாழை மர தோரணங்களுடன் மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.
மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால் கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடுழி வாழ்வர் என்று கூறப்படுகிறது.
துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள்.
எனவே துளசி இலையுடன் கூடிய நீர் கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.
ஆண்கள் வழிபடும் முறை
ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனதால் வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும்.
பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது.
குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.