அர்ச்சுனா இராமநாதன் எம்பி பதவிக்கு சிக்கல்?
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பதவியிலிருப்பதற்கான தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘Quo Warranto மனு மீதான வாதங்களை விசாரணை செய்வதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.
இவ்விடயம் இன்று (2) மேல்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், நீதியரசர்கள் குழாம் முழுமையடையாத காரணத்தினால் அது ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தை மீறும் செயல்
அபிநவ நிவஹல் பெரமுனவின் (Abhinawa Niwahal Peramuna) தலைவர் ஓஷல ஹேரத் என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் போது, அவர் இன்னும் அரசாங்க மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க சேவையிலிருந்து முதலில் ராஜினாமா செய்யாமல் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தை மீறும் செயலாகும் என்று வாதிடும் மனுதாரர், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டப்பூர்வமாக பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரியுள்ளார்.
இவ்விடயத்தை சாத்தியமான மிகக் குறைந்த திகதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த வழக்கை வாதங்களுக்காக ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு நிர்ணயித்துள்ளதுடன், அதனைப் பட்டியலில் முதலிடத்திலும் வைத்துள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான ஷெனல் பெர்னாண்டோவுடன் இணைந்து சட்டத்தரணி என்.கே. அசோக்பரன் முன்னிலையானார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி நிஷாதி விக்ரமசிங்கவுடன் இணைந்து சட்டத்தரணி சேனானி தயாரத்ன முன்னிலையான நிலையில், அரச தரப்பு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்க முன்னிலையானார்.