சுப்பிரமணிக்கு கண்டதையும் உண்ண கொடுக்க வேண்டாம்!
கதிகாம கந்தனுக்கு பாதயாத்திரை செய்யும் சுப்பிரமணி என்று அழைக்கப்படும் நாய்க்கு யோகட் வழங்குவதையும், அதைத் தூக்கித் தடவி அழைத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்ஷன் தெரிவிக்கையில்: “சுப்பிரமணி இதுவரை மூன்று இடங்களில் சோர்வடைந்து சிகிச்சை பெற்றுள்ளது.

இதுவரை மூன்று இடங்களில் சிகிச்சை
இறுதியாக, விநாயகபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை நேற்றிரவு சென்றடைந்தபோதும், அது மிகவும் சோர்வடைந்திருந்ததால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அது தற்போது உகந்த மலையை நோக்கி தனது பயணத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
தொடர்ச்சியான பயணத்தினால் இந்த நாய் மிகவும் களைப்படைந்துள்ளது. சென்ற இடமெல்லாம் மக்கள் யோகட் மற்றும் பால் வழங்கியதால், அதன் உடலில் சீனியின் அளவு (Sugar level) அதிகரித்துள்ளது.

இதனால் அதன் உடல்நலம் மற்றும் தேக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து இனிமேல் அதற்கு யோகட் கொடுப்பதையோ அல்லது அதைத் தூக்கி அழைத்துச் செல்வதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே, சுப்பிரமணியால் தனது பயணத்தை உகந்த மலை வரை தொடர முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.