முக்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை தீவிரம் ; நீதவான் ஸ்தலப் பரிசோதனை
கேகாலை மாவனெல்லை, தனாகமவத்த பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பான ஸ்தலப் பரிசோதனையை மாவனெல்லை பதில் நீதவான் நிசேதா குமாரி கருணாதிலக்க இன்று (02) முன்னெடுத்தார்.
கொல்லப்பட்டவர்களில் மாவனெல்லை, தனாகமவத்தையைச் சேர்ந்த 58 வயதான பெண் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் ஆகியோர் தமது வீடுகளில் தனியாக இருந்த வேளை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை, தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமையும் இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்வையிட்ட பதில் நீதவான், மேலதிக பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காகச் சடலங்களைக் கேகாலை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.