திருகோணமலையில் அடாவடியாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
திருகோணமலை புத்தர் சிலை அமைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் 16ஆம் தேதி, திருகோணமலை நகரின் கடற்கரை ஓரத்தில் ஒரு குழுவினருடன் இணைந்த பௌத்த பிக்குகள், உரிய அனுமதியின்றி விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

அடாவடியாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை
குறித்த பகுதி கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானது. இக்கட்டுமானத்திற்கு நகர சபையிடமோ அல்லது திணைக்களத்திடமோ எவ்வித சட்டபூர்வ அனுமதியும் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டது.
திருகோணமலை நீதவான் எம். என். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு கடந்த ஜனவரி 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இன்று (02) வரை அவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (2)காலை பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் கடும் மறுப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்களின் பிணைக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலை நீட்டித்து உத்தரவிட்டார்.