மறுவிசாரணைக்கு வரும் திருகோணமலை குமாரபுரம் படுகொலை
1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் அறுவருக்கு எதிராகவும் மறுவிசாரணை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தனர் எனவும் மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தினர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

09 பெண்கள் உட்பட 24 தமிழ் பொதுமக்கள் கொலை
அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி சட்ட மா அதிபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டைப் பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும், தனது உத்தரவை அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் அணிவகுப்பின்போது பதிவு செய்யப்பட்ட சில குறிப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுத் தரப்புக்கு மேல்நீதிமன்ற நீதிபதி அனுமதி மறுத்தமை தவறு என்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
09 குழந்தைகள், கர்ப்பிணித் தாய் ஒருவர் அடங்கலாக 09 பெண்கள் உட்பட 24 தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தனர் எனவும் மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தினர் எனவும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஆறு பேர் மீது அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் 101 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் 2016ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
அடையாளம் காணும் அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் அதிகாரபூர்வ கையொப்பம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, விசாரணையின்போது அவற்றைச் சமர்ப்பிக்க மேல்நீதிமன்ற நீதிபதி அனுமதி மறுத்தமை ஒரு தொழில்நுட்ப ரீதியான தவறு என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அமல் ரணராஜா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அடையாளம் காணும் அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் அதிகாரபூர்வ கையொப்பம் மற்றும் திகதி இல்லாததை ஒரு முக்கிய முடிவெடுக்கும் காரணியாக மேல்நீதிமன்ற நீதிபதி கருதியமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நீதியரசர் பிரேமச்சந்திர தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
"சம்பந்தப்பட்ட சாட்சியம் ஏற்றுக்கொள்ளத் தக்கதா மற்றும் அது மதிப்பீடு செய்யப்படக்கூடியதா என்பதில்தான் நீதிபதி கவனம் செலுத்தியிருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட தரப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த ஆஜரானார்.