அரசின் எலும்புத் துண்டுகளுக்காக கோணேஸ்வரரை அரசுடமையாக்க திட்டமா; வடக்கு வேடிக்கை பார்க்காது !
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அரசுடமையாக்குவதற்கு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் வெளியிட்ட ஊடக அறிக்கையில் ,
செந்தில் தொண்டமானுக்கு எச்சரிக்கை
கிழக்கின் முதுசமும் தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அடாவடிகளை வன்மையாகக் கண்டிப்பதோடு ஆலயச் செயற்பாடுகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமென்று கோருகின்றோம்.
கிழக்கு ஆளுநரின் அடாவடிகள் தொடர்ந்தால் வடக்குக் கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை இத்தால் சம்பந்தப்பட்டோருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம். கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என்பதை ஆளுநர் அறிவாராக.
மேலும் அரசின் எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலைக் கைவிடுமாறு கிழக்கின் ஆளுநரைக் கோருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.