திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; சம்பவம் தொடர்பான பொலிஸாரின் பூரண விளக்கம்
திருகோணமலை துறைமுக காவல்துறை பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைதியின்மையைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அத்துடன், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில தவறான செய்திகளும் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்கரை பாதுகாப்பு வலயம்
எனவே, அது தொடர்பான சரியான நிலைமையை தெளிவுபடுத்துவதற்காகவே, அறிக்கையை வெளியிடுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் தேரர்கள் மற்றும் அதன் நம்பிக்கையாளர்கள், திருகோணமலை நகரில் கடற்கரை பாதுகாப்பு வலயத்துக்குள் அத்துமீறி குடிலொன்றை அமைத்து புத்தர் சிலை ஒன்றை வைக்க முயற்சிப்பதாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது.

கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவத் திணைக்கள அதிகாரிகளே, திருகோணமலைத் துறைமுக பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்தனர்.
அதற்கமைய, காவல்துறை அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று, குறித்த அத்துமீறிய நிர்மாண வேலையை நிறுத்துமாறு அறிவுறுத்திய போதிலும், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள பகுதியில், இதற்கு முன்னரும் அத்துமீறிய நிர்மாணம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அகற்றுமாறு கோட்டை வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதிக்கு சுற்றாடல் அமைச்சு கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்திருந்தது இதற்கு மத்தியிலேயே, பிரச்சினைக்குரிய நிர்மாணமும் புத்தர் சிலை பிரதிஸ்டையும் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இனங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்க வழிவகுக்கலாம் என அவதானிக்கப்பட்டதாகவும் பொலிஸ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி என்பதால், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி யாரேனும் புத்தர் சிலைக்குச் சேதம் விளைவித்தால், அது பிரதேசத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம் என காவல்துறையினர் கருதியதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்தச் சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை பாதுகாப்பாக அந்த குறித்த இடத்திலிருந்து அகற்றி, திருகோணமலைத் துறைமுக காவல்துறை நிலையத்துக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், அத்துமீறிய கட்டுமானத்தை நிறுத்தச் சென்றபோது, அந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தினர். இதன்போதே, அதனை காவல்துறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக, பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எந்தச் சந்தர்ப்பத்திலும் தேரர்கள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் பொலிஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.