திருகோணமலை புத்தர் விவகாரம்; அரசாங்கத்தை எச்சரிக்கும் சரத் வீரசேகர
பெளத்த மக்களுடனும் சாசனத்துடனும் அரசாங்கம் விளையாட முயற்சிக்கக் கூடாது. இந்த அரசாங்கத்துக்கு பெரும் எண்ணிக்கையிலான சிங்கள பெளத்த மக்களே வாக்களித்தார்கள். தாம் வாக்களித்த அரசாங்கமா இவ்வாறு செயற்படுகிறது என பெளத்த ர்கள் கவலைத் தெரிவிப்பதாக சரத் வீரசேகர தெரிவித்தார்.
திருகோணமலை புத்தர் விவகாரத்தில் அரசாங்கம் தனது தவறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சம்பவம் தொடர்பில் கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சரத் வீரசேகர தெரிவிக்கையில்,

பெளத்த மக்களுடனும் பெளத்த சாசனத்துடனும் விளையாட வேண்டாம்
இலங்கை பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் பெளத்த நாடாகும். அவ்வாறிருக்கையில் திருகோணமலையில், நேற்று (நேற்று முன்தினம்) இரவு அரச அனுசரணையுடன் பொலிஸார் பிக்குகளை தாக்கி அந்தப் பிரதேசத்திலிருந்து புத்தர் சிலையை நீக்கியமை மிகவும் அற்பமான கீழ்த்தனமான செயலாகும்.
நாட்டில் பயங்கரவாதம் இருந்த காலத்திலும், விடுதலைப் புலிகள் தாக்கிய போதும்கூட நாங்கள் திருகோணமலையிலுள்ள புத்தர் சிலையை பாதுகாத்துள்ளோம். ஆனால் இது எமது பெளத்த சாசனத்துக்கும் பெளத்த கலாசாரத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாகும்.
அதேபோன்று உண்மையான சிங்கள பெளத்தர்கள் இந்த செயற்பாட்டால் கோபமடைந்துள்ளார்கள். எனவே, இதனை அரசாங்கம் உடனடியாக சரிசெய்ய வேண்டும். இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதி வழிபாட்டு இடத்துக்கான காணி உறுதிப்பத்திரம் இருப்பதாக அந்தப் பிரதேசவாசிகள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.
அதேபோன்று, அந்த எல்லைப்பகுதியில் கோயில்கள், உல்லாச விடுதிகள் போன்றனவும் இருக்கின்றன. அவற்றுக்கும் காணி உறுதிப்பத்திரம் இருக்கிறதா? உறுதிப்பத்திரம் இருக்குமாக இருந்தால் வழிபாட்டு தலத்துக்கான உறுதிப்பத்திரம் இருக்கும் விகாரைக்கு மாத்திரம் ஏன் இடையூறு விளைவிக்கிறார்கள்.
அதேபோன்று, குறித்த பகுதியிலுள்ள கோயில் மற்றும் விடுதிகளுக்கு உறுதிப்பத்திரம் இல்லை என்றால் அவற்றை ஏன் உடைத்து நீக்கவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.
ஒட்டுமொத்த சிங்கள பெளத்த மக்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாகவே நாங்கள் கருதுகிறோம். அரச அனுசரணையுடன் இரவோடு இரவாக கோயில்கள் உடைக்கப்பட்ட சம்பவங்களை நாங்கள் அவதானித்ததில்லை. கத்தோலிக்க தேவாலயங்களோ, முஸ்லிம் வழிபாட்டு இடங்களோ உடைத்ததை நாங்கள் அவதானித்ததில்லை.
இருந்தபோதும், அரசாங்கத்தின் மனப்பான்மையின் காரணமாகவே பெளத்த சமய சாசனத்துக்கு மாத்திரம் இவ்வாறான அநீதிகள் இழைக்கப்படுகின்றன. அமைச்சர் பிமல் ரத்நாயக்க அந்தக் காலப்பகுதியில் வெளிநாட்டுப் பயணமொன்றின்போது இது சிங்கள பெளத்த நாடு அல்ல. இது சிங்கள பெளத்த நாடென்று யார் கூறுவது? சிலையை வணங்குவது என்பது நாகரீகமற்றது என்று கூறியிருந்தார்.
அதாவது புத்தர் சிலையையும் இயேசுவின் சிலுவையையும் கோயில்களிலுள்ள சிலைகளையும் வணங்குவது நாகரீகமற்றது என்று அவர் கூறியிருந்தார். அதன் காரணமாகவா புத்தர் சிலையை அவமதித்து அந்த சிலையை கடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதேபோல், அரச மரம் என்பது வெறும் மரம் ஒன்று மாத்திரமே.
தென்னை மரத்தின் அடியில் புத்தர் நிலைகொண்டிருந்தால் தேங்காய் உண்ண மாட்டீர்களா? என்று வினவும் அமைச்சர்களே இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள். இதுவே இந்த அரசாங்கத்தின் மனப்பான்மை.
அதனால், சிங்கள பெளத்த மக்கள் மாத்திரமல்ல தேசத்தை நேசிக்கும் சகல இன மக்களும் இந்த இழிவான செயற்பாட்டை முழுமையாக எதிர்க்க வேண்டும். பெளத்த நாட்டில் பெளத்த மக்களுடனும் பெளத்த சாசனத்துடனும் விளையாட முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.