வாழைப்பூவின் மகத்துவமான மருத்துவ குணங்கள்!
வாழைப்பூவில் நமது உடலுக்கு நன்மை அளிக்கும் பல மருத்துவ குண்டங்கள் அடங்கியுள்ளன. வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை.
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.
இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். அதோடு இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது.
இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூ உள்ளது .
அதுமட்டுமல்லாது வாழைப்பூ மலச்சிக்கலைப் போக்குவதுடன் சீதபேதியையும் கட்டுப்படுத்தும் என்பதுடன் வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
பெண்களுக்கு அருமருந்து:
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
வாழைப்பூ கஷாயம்:
வாழைப்பூ கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். பெண்களுக்கு இது கை கண்ட மருந்தாகும்.
அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும். மேலும் வாழைப்பூ பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு.
அத்துடன் வாழைப்பூ மலட்டுத் தன்மையைப் போக்கும் என்பதுடன் ஈறு வீக்கம், புண் இவற்றிற்கும் சிறந்த மருந்தாகும். மேலும் வாழைப்பூ உடலில் உள்ள வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையையும் நன்கு வெளியேற்றும்.