சிலாபம் வைத்தியசாலையின் சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் ; நோயாளர்கள் அவதி
நாட்டில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையின் மூன்று சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் மூழ்கிய மூன்று சிகிச்சை அறைகள்
இதன் காரணமாக குறித்த அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு அறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (21) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தூனமலை நீர் அளவீட்டு நிலையத்தின் தரவுகளின்படி, தற்போது பல பகுதிகளில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. வான்பகுகளின் சில இடங்களில் இந்த அளவு 250 முதல் 300 மில்லிமீட்டர் வரை உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது
. அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கம்பஹா, கட்டான ,வத்தளை தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது: நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ள அபாய நிலைமைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தற்போதைய நிலவரங்களை உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.